India

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் ஊரக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் கிராமபுற மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இந்த திட்டத்தை முடக்க முயற்சி செய்து வருகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு எல்லா இட்டங்களிலும் பரவி வரும் நிலையில் திட்டங்களின் பெயர்களையும் இந்தியில் மாற்றி வருகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, காந்தி மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் பா.ஜ.க தலைவர்கள் காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்று பெயர் மாற்றம் செய்துள்ளது ஒன்றிய அரசு.

அதோடு,இது வரை இந்த திட்டத்திற்கு 100% நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்தது. ஆனால் தற்போது 60% நிதியை ஒன்றிய அரசும் மீதம் 40 % நிதியை மாநில அரசும் வழங்கும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் திட்டங்களுக்கான நிதியில் ஒன்றிய அரசு குறைந்த நிதியையே விடுவித்து வருகிறது. மாநில அரசுகள் நிதிச்சுமையில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் தலையிலேயே ஒன்றிய அரசு கட்டப்பார்க்கிறது.

மேலும்,தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் உள்ளது. இதற்கான நிதியும் தற்போது என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமான சிதைக்கவே ஒன்றிய பா.ஜ.க அரசு இத்தகைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: 100 நாள் வேலை திட்டம் - ரூ. 4034 கோடி நிலுவைத் தொகை : மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!