India

செங்கோட்டையில் திடீரென வெடித்த கார்.. 13 பேர் பலி.. டெல்லிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை -நடந்தது?

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டை மெட்ரோ இரயில் நிலையம் முதலாம் வாயில் அருகே ஓடுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. கார் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த 8-க்கும் மேற்பட்ட கார்கள் உருக்குலைந்தது. இன்று (நவ.10) மாலை சுமார் 6.30 - 6.55 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோர சம்பவத்தில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர். கார் வெடித்து சிதறியதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அபாய ஒலி எழுப்பி வெளியேற்றினர்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் டெல்லிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் NSG மற்றும் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தடயவியல் நிபுணர்களும் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் விரைந்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கோர நிகழ்வால் செங்கோட்டையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கார் வெடி சத்தம் சுமார் 2 கி.மீ. வரை கேட்டதால் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் டெல்லிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு டெல்லி விமான, இரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிகழ்வை தொடர்ந்து மும்பையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Also Read: புதுக்கோட்டையில் ரூ.766 கோடியில் நலத்திட்டப் பணிகள்.. வழங்கினார் முதலமைச்சர் - என்ன துறைக்கு, என்ன பணி?