India

கன்னடர் மீது வீண் பழி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. தலைமறைவான விமானப்படை அதிகாரி.. நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் தற்போது மொழி ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வட இந்தியர் ஒருவர், கன்னட ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் "பெங்களுருவில் வசிக்க வேண்டுமென்றால் ஹிந்தியில் பேச வேண்டும்" என்று திமிராக பேசிய வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் அந்த வட இந்திய வாலிபர்.

இந்த சூழலில் தற்போது பெங்களுருவில் விமானப்படை அதிகாரி ஒருவர் கன்னட வாலிபர் ஒருவர் தன்னை தாக்கியதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்த நிலையில், அந்த விமானப்படை அதிகாரி கூறியது போலி என்று சிசிடிவி காட்சி மூலம் அம்பலமாகியுள்ளது.

அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிவி ராமன் நகரில் உள்ள டிஆர்டிஓ பேஸ் 1 டவுன்ஷிப்பில் ஷில்லாதித்யா போஸ் - மதுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஷில்லாதித்யா போஸ் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி விமானப்படையில் Squadron Leader ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று (ஏப்.21) காலையில் இருவரும் காரில் வீட்டில் இருந்து விமான நிலையம் சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், படுகாயமடைந்த விமானப்படை அதிகாரி தனது காரில் மருத்துவமனை சென்றார்.

அப்போது அவர் வெளியிட்ட வீடியோவில், "பைக்கில் வந்தவர் டிஆர்டிஓவை சேர்ந்தவர்களா நீங்கள் என்று கடுமையாக தாக்கினார். எனது நெற்றியை குறிவைத்து தனது சாவிக் கொண்டு அவர் தாக்கியதில் இரத்தம் கொட்டுகிறது. எனக்கு அங்கே யாரும் உதவிக்கும் வரவில்லை. அங்கிருந்தவர்கள் கூட பைக்கில் வந்தவருக்கு ஆதரவாக என்னை திட்டினர். விமானப்படை கமாண்டராக நான் மக்களை காக்கிறேன்; ஆனால் என்னை காக்க யாருமில்லை" கதறி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற கையோடு, மனைவியுடன் சேர்ந்து அந்த விமானப்படை அதிகாரி பையப்பன ஹள்ளி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பைக்கில் வந்த கால்சென்டர் ஊழியர் விகாஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது விகாஷ் குமார், "கார் தான் முதலில் பைக்கில் வந்து மோதியது. இதனை தட்டிக்கேட்டபோது என்னை தாக்கினர். கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். கீழே தள்ளி மிதித்தனர்'' என்று புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பைக் மீது கார் மோதியதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் விமானப்படை அதிகாரி போஸ், பைக்கில் வந்த விகாஷ் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் விகாஷின் செல்போனை பிடிங்கி வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் கைகலப்பு ஆனது அம்பலமானது. இதையப்படுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீதும் போலீசார் கொலை முயற்சி உள்பட மேலும் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது விமானப்படை அதிகாரி ஷில்லாதித்யா போஸ் கொல்கத்தாவில் தலைமைறைவாகி உள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‛‛விமானப்படை அதிகாரியும், அவரது மனைவியும் காரின் டேஷ்கேமராவில் உள்ள பதிவை தர மறுக்கின்றனர். விமானப்படையின் அதிகாரியின் மனைவி மதுமிதா, 'டிவைஸ் லாக் செய்யப்பட்டுள்ளது, பாஸ்வேர்ட் கணவருக்கு தான் தெரியும், ஆனால் அவர் இப்போது கொல்கத்தாவில் இருக்கிறார்' என்கிறார்.

விமானப்படை அதிகாரி வெளியிட்ட வீடியோவில் டேஷ் கேமராவில் நடந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் இப்போது அவர்கள் அதனை வழங்க மறுக்கின்றனர். விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்'' என்றுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த விவகாரத்தில் பைக்கில் வந்த கன்னடர் விகாஷுக்கு ஆதரவாக கன்னட அமைப்பினர் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது வலுவான கண்டனங்களை பதிவு செய்தனர். ஏற்கனவே இந்தி திணிப்பு பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், தற்போது இந்த பிரச்சினை பெங்களுருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர், முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சி!” : முதலமைச்சர் பெருமிதம்!