India
“பெங்களூருவில் இருக்கனும்னா இந்தி கத்துக்கோ” - கன்னடிகா ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வட இந்தியர் - நடந்தது?
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு தேவையானவற்றை செய்யாமல், பாஜகவுக்கு தேவையானதை செய்து வருகிறது. இதில் இந்தி திணிப்பு என்பது பாஜக ஒரு முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியாவை 'ஹிந்தி'யாவாக மாற்ற துடித்து வருகிறது பாஜக.
அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை மூலம், மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி, அதன் மூலம் இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. இதற்கு முதல் ஆளாக வழக்கம்போல் தமிழ்நாடே எதிர்ப்பு குரலை கொடுத்தது. இந்தி திணிப்பு எதிராக தமிழ்நாடு கொடுத்த குரலை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மற்ற மாநிலங்களில் பேசி சண்டையிட்டு வருவது தொடர்பான வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கூட மகாராஷ்டிராவில் இதே போல் ஒரு பிரச்சினை எழுந்தது.
அந்த வகையில் தற்போது பெங்களுருவிலும் இதே போல் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது கர்நாடக மாநில பெங்களுருவில் வசிக்கும் வட இந்தியாவை சேர்ந்த இந்தி பேசும் வாலிபர் ஒருவர், கர்நாடகாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர், “பெங்களூரூவில் இருக்க வேண்டுமென்றால், இந்தியை கட்டாயம் கற்றுக்கொண்டு பேச வேண்டும்” என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு அந்த ஓட்டுநரும், "கர்நாடகாவுக்கு வந்தால் நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டுமே தவிர, நாங்கள் இந்தியில் பேச வேண்டிய அவசியம் இல்லை" என்று பதில் பேசியுள்ளார். இந்த வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவில் யாரும் இந்திக்கு எதிர்ப்பு இல்லை; இந்தி திணிப்புக்கு மட்டுமே எதிர்ப்பு என்றும், இதற்குதான் இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பெங்களுருவில் youtuber ஒருவர் சாலையில் செல்வோரிடம் 'பெங்களுருவில் அதிகாரபூர்வ மொழி என்ன?' என்று எழுப்பிய கேள்விக்கு, "பெங்களூருவுக்கு என்று தனி மொழி கிடையாது" என்றும், "இந்தி" என்றும் பலரும் பேசிய வீடியோ வைரலானது. அதோடு பலரும் கர்நாடகாவில் உள்ள மக்கள் இந்தியை கற்றுக்கொண்டால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று வட இந்தியர்கள் பேசிய வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!