India

வக்ஃப் திருத்த மசோதா : பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை இன்று மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் மக்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த எம்.பி கிருஷ்ண பிரசாத் பேசும் போது, இந்த மசோதாவில் 2 திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என முன்மொழித்தார்.

அது, மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக நியாமான முறையில் முடிவுகள் எடுக்கும் வகையில் அதிக அதிகாரம் கொண்ட உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். 6 மாதங்களுக்குள் சொத்து விபரங்கள் பதிவு செய்யவேண்டும் என்பது போதுமானது அல்ல. அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் ஆகிய இரண்டு திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று கிருஷ்ண பிரசாத் MP வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளே பா.ஜ.கவின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”ஒன்றிய அரசுக்கு மதம் பிடித்து விட்டது” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஆ.ராசா MP பேச்சு!