India

”10-வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுமா?” : டி.ஆர்.பாலு MP எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி அளித்த பதில்!

நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டர் தொலைவு வரை 10வழிச் சாலைகளாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு முன்வருமா? என நாடாளுமன்ற மக்களவையில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,”இத்தகைய கோரிக்கைகள் அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. அவற்றின் மீதான முடிவு குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து அடர்த்தி, நெடுஞ்சாலை இணைப்புக்கான அவசியம், முன்னுரிமை தேவை, பிரதமர் கதிசக்தி திட்டத்துடனான இயைபு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக தற்போது ஒன்றிய அரசின் பரிசீலனையில் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.

அதேபோல், நீண்ட தாமதத்துக்குப் பிறகும் நிறைவடையாத திருப்பெரும்புதூர் - சுங்குவார்ச்சத்திரம் - வாலாஜாபாத் சாலைப் பணிகள் எப்போது முடிவடையும் என்ற மற்றுமொரு கேள்வியையும் டி.ஆர்.பாலு,எம்.பி எழுப்பி இருந்தார்.

இதற்கும் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, "சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பூந்தமல்லி- வாலாஜாபாத் சாலைப் பகுதியை ஆறுவழிப் பகுதியாக தரம் உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் ஜூன், 2012இல் தொடங்கப்பட்டன. சுங்கச் சாலையாக அமைத்து இயக்கிட இந்த திட்டம் எஸ்ஸெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் உரிமதாரரான எஸ்ஸெல் நிறுவனம் திட்டப் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறிய காரணத்தால் உரிம ஒப்பந்தம் ஜூலை 2016 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் திருப்பெரும்புதூர்- காரைப்பட்டி, காரைப்பட்டி-வாலாஜாபாத் என திருப்பெரும்புதூர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருப்பெரும்புதூர்-காரைப்பட்டி சாலைப் பணிகள் 2025 ஏப்ரல் இறுதியிலும், அடுத்த பகுதியான காரைப்பட்டி-வாலாஜாபாத் சாலைப் பணிகள் 2026 அக்டோபர் மாதத்திலும் நிறைவடையும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியினர் விவரங்கள் இல்லை : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!