India

டெல்லியை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பட்டாசு வெடிக்கத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு !

டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்கள் பலரது வாகன போக்குவரத்து காரணமாகவே காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிலும் அண்மைக்காலமாக இந்த பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று தடை விதித்தது டெல்லி அரசு. குறிப்பாக பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.

மேலும் உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனினும் டெல்லியில் காற்று மாசு குறையாததால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை விசாரித்தது. அந்த வழக்கில் முழு ஆண்டும் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து டெல்லி அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து டெல்லி அரசு ஆண்டு முழுதும் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது.

இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் வரும் ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில பகுதிகளிலும் இந்த தடை உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: அம்பேத்கரின் ‘சொர்க்கத்தில்’ அமித்ஷாக்களுக்கு இடமில்லை! : முரசொலி தலையங்கம்!