India
கிணற்றில் தண்ணீர் எடுத்ததால் ஆத்திரம்.. அடித்தே கொல்லப்பட்ட தலித் இளைஞர் -பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம்!
பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித்துகள் மீதான வன்கொடுமை பெருமளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறிய விஷயங்களுக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் தற்போது தண்ணீர் எடுத்ததற்காக தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாரத் ஜாதவ் (27) என்ற இளைஞர். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், இவரது உறவினர் ஊரான இந்தர்கர் என்ற கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துள்ளார். இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த பதம் சிங் தாகர் என்ற நபர் அந்த இளைஞரை தடுத்துள்ளார்.
அப்போது இருவருக்குள்ளே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பதம் சிங் தாகருடன் வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் சேர்ந்து அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து தங்கள் கைகளில் வைத்திருந்த கட்டைகளை கொண்டு தலித் இளைஞர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த இளைஞர் கடுமையாக காயமடைந்துள்ளார்.
இருப்பினும் விடாத அந்த கும்பல், கடும் காயமடைந்த நிலையிலும் அந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் நாரத் ஜாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இளைஞரின் குடும்பத்தினர், இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்த அவர்கள், அந்த தந்தை, மகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாகும் வரை கொடூர தாக்குதல் நடத்திய அந்த கும்பல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பகிர்ந்த மத்திய பிரதேச காங்கிரஸ், “சாதி அடிப்படையிலான பாகுபாடுக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் தீர்வு காண மாநில பாஜக அரசு தவறிவிட்டது. சிவ்புரியில், நாரத் ஜாதவ் என்ற தலித் இளைஞர் மற்றொரு பிரிவினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பட்டப்பகலில் இக்கொடூரச் செயல் நடந்திருக்கிறது. மாநில உள்துறை அமைச்சர் சுற்றுலாவில் பிஸியாக இருக்கும்போதும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது அச்சம் இல்லாதபோதும், சட்டமீறல் நிலவும் போதும், இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விடுகின்றன.” எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!