India
“வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை!” : கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜுலை 30 அன்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர்.
இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது. ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருஓணம் விழா, 2024-ல் அரசு விழாவாக முன்னெடுக்கப்படாது என கேரள அரசு அறிவித்தது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பிரதமர் மோடி, நிலச்சரிவு ஏற்பட்டு பகுதியளவிற்கும் மேல் மீட்புப்பணிகள் நிறைவுற்ற பின், ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஒன்றிய அரசின் விதிமுறைகள் படி மீட்பு பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 219 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.
புதையுண்ட, இடிந்த ஒரு வீட்டுக்கு 1.30 லட்சம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் என்பதுதான் ஒன்றிய அரசின் விதிமுறை.
அந்த தொகையில் ஒரு பள்ளிக்கு அடித்தளம் கூட போடமுடியாத். எனவேதான் வயநாடு பேரிடர் மீட்பு பணிக்கு 1,200 கோடி ரூபாயும், புனரமைப்பு பணிகளுக்கு 2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதியும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. விமானப்படையினர், இராணுவத்தினர் மேற்கொண்ட நிவாரண பணிகளுக்கும் மாநில அரசுதான் அனைத்து செலவையும் வழங்க வேண்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டு நடந்த கனமழை வெள்ளப்பெருக்கு பேரிடரின் போதும், மீட்பு பணிக்கு வந்த இந்திய விமானப் படைக்கு 102 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு வழங்கிய அரிசிக்கு 205 கோடி மாநில அரசு வழங்கியது.
அதேபோன்று வயநாடு மீட்பு பணிக்கு வந்த விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கும், ராணுவத்தினரின் அனைத்து செலவுகளுக்கும் மாநில அரசுதான் பணம் வழங்க வேண்டியிருக்கிறது” என தெரிவித்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!