India
பாலியல் புகார் விவகாரம் : நிருபர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட பா.ஜ.க MP சுரேஷ் கோபி!
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை சில காரணமாக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து நடிகரும் பா.ஜ.க எம்.பியுமான சுரேஷ் கோபியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ”இந்த விஷயம் உங்களுக்கு ஒரு தீனி. சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்” என கையை நீட்டி நிருபர்களைப் பார்த்து ஆவேசமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சுரேஷ் கோபிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!