India

எலான் மஸ்க் இந்திய பயணம் ரத்துக்கு காரணம் என்ன?.. பிரியங்கா சதுர்வேதி MP கிண்டல் பதிவு!

டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் இம்மாதம் இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென இந்திய பயணத்தை எலான் மஸ்க் ஒத்தைவைத்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”துரதிர்ஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க், இந்தியா வர இருப்பதை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயணத்தை போல் பெரிதுபடுத்த பா.ஜ.க. திட்டமிட்டது. எலான் மஸ்க் வருகை ரத்தானதால் மோடி ஆதரவாளர்கள்ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில்எலான் மஸ்க் – மோடி சந்தித்துப் பேசுவது நடுத்தர வர்க்கத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என பா.ஜ.க. கணித்திருந்தது.

எலான் மஸ்க் அறிவிப்பின் மூலம் தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்கு முன் அவர் இந்தியா வரமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் ஜூன் 4-ல் முக்கிய மாற்றம் நடக்கப் போவதை உணர்ந்தே எலான் மஸ்க் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், வெளியேறப் போகும் ஒரு பிரதமரை காண இந்தியாவுக்கு கிளம்பி வருவதில் எந்தப் பயனும் இல்லை என எலான் மஸ்க் உணர்ந்திருப்பார். அவருக்கு இங்குள்ள நிலவரம் தெரிந்திருக்கும். இந்தியா கூட்டணியின் பிரதமர் அவரை விரைவில் வரவேற்பார் என சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரியங்கா சதுர்வேதி " பா.ஜ.கவின் பிரச்சாரத்துக்கு தன்னை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால்தான் எலான் மஸ்க் இந்தியாவுக்கான தனது பயணத்தை ரத்து செய்தார் என்பது உண்மையாக இருக்குமா? என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் எலான் மஸ்க் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க எலான் திட்டமிட்டதாக கூறப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டெஸ்லா கார் தொழிற்சாலையை அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தது. இந்நிலையில், குஜராத்தில் முதலீடு செய்ய எலான் மஸ்க் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ”மோடி பா.ஜ.கவின் பிரதமர்; இந்தியாவின் பிரதமர் அல்ல" : சரத்பவார் தாக்கு!