India

நீதிமன்ற உத்தரவுக்கு SBI இணங்க வேண்டும் : CPM அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நடைமுறை அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே இரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இந்த விவரங்களை வெளியிடுவதிலிருந்து தவிர்க்கவே எஸ்.பி.ஐ இதுபோன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாக இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மோடி அரசின் அழுத்தத்தில் SBI செயல்படுகிறது என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு விமர்சித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் அளிக்க பாரத ஸ்டேட் வங்கி தவறிவிட்டது. இந்தத் தீர்ப்பை வழங்க SBIக்கு மூன்று வார கால அவகாசம் அளித்துள்ளது.

அதற்குப் பதிலாக, மார்ச் 6-ம் தேதிக்கு முன்னதாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க மேலும் 116 நாட்கள் அவகாசம் கேட்டு எஸ்பிஐ நீதிமன்றத்தை அணுகியது. தேர்தல் முடியும் வரை தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வெளிப்படையான தந்திரம் இது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட எஸ்பிஐ, சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொகுக்க முடியாது என்பது நம்பமுடியாதது.

மோடி அரசின் அழுத்தத்தால்தான் SBI இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டை எடுத்திருக்க முடியும். தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் SBI உடனடியாக சமர்பிப்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது.

Also Read: UAPA சட்டத்தால், பாசிச அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க : தவறுகளுக்கு தீர்வு காணும் இடத்தில் நீதிமன்றங்கள்!