India

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்... வாக்குமூலம் கொடுக்க சென்றபோது நீதிபதி செய்த அதிர்ச்சி !

திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கணவரின் உதவியோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த பிப் 13-ம் தேதி பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிபதி பிஷ்வாடோஷ் தார் (Bishwatosh Dhar) என்பவரிடம் வாக்குமூலம் அளிக்க சென்றார். பாலியல் வழக்கு என்பதால் நீதிபதி தனி அறையில் வாக்குமூலத்தை பெறுவார். அந்த வகையில் அந்த பெண்ணிடமும் நீதிபதி தனது தனி அறையில் வாக்குமூலம் பெற முனைந்துள்ளார்.

ஆனால் அந்த நீதிபதி, அறையில் உள்ள பாதுகாவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பிறகு விசாரணையை தொடங்கிய நீதிபதி, அவரது இருக்கையில் இருந்து எழுந்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எழுத்துபூர்வமான கடிதத்தை வழக்கறிஞர்கள் சங்கத்தில் கொடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுக்க சென்ற இடத்தில், நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘சினேகம் அறக்கட்டளை’ விவகாரம் : பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி அதிரடி கைது ! - பின்னணி என்ன ?