India

"மகன் திருமணம், அறுவடை இருக்கிறது" - பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய அவகாசம் கோரி மனு !

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், " பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

21 ஆம் தேதிக்குள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சரணடையவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், அதில் பலர் தலைமறைவாயதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளில் சிலர் சரணடைவதற்கு அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவரான கோவிந்த் பாய் என்பவர் சிகிச்சை எடுத்துவருவதால் அவகாசம் வேண்டும் என்று மனுதாக்கல். அதே போல ரமேஷ் ரூபாபாய் என்பவர் மகன் திருமணம் நடைபெறவுள்ளதாக அதில் கலந்துகொள்ள வேண்டும் என அவகாசம் கோரியுள்ளார். அதே போல மிதேஷ் சிம்மான்லால் என்பவர் அறுவடை நடந்து வருவதால் அவகாசம் வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.

21 ஆம் தேதி சரணடையும் அவகாசம் முடிவடைவதால் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கான அமர்வினை நாளை தலைமை நீதிபதி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Also Read: இரண்டாயிரம் ஆண்டு பழமையான கோவில்களை மோடி அரசு இடித்தது : ஜோதிர் சங்கராச்சார்யாவின் முழு பேட்டி விவரம் !