India

இந்துத்துவ வகுப்புவாதம் : AI காலத்திலும் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் அவலம்!

இந்தியாவில் மொழி, மதம், சாதி (தவிர்த்திட வேண்டிய பிரிவினை) அடிப்படையிலான பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளன. எனினும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மநு தர்மமும் சனாதனமும், பிறப்பின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றன.

பார்ப்பனர்கள் (பிராமணர்கள், எவரை விடவும் மேலானவர்கள் என தாங்களே குறிப்பிட்டு கொள்ளும் சமூகம்), சத்திரியர்கள் (ஆட்சி செய்வோர் - அரசர்கள்), வைணவர்கள் (வணிகர்கள்) மற்றும் சூத்திரர்கள் (வேளாண்மை செய்வோர்; பார்ப்பானைப் பொறுத்தவரை அடிமை சமூகம்)! குறிப்பாக, வட மாநிலங்களில் வாழும் சனாதன பின்பற்றாளர்கள், தெற்கில் வாழும் அனைவரையும் சூத்திரர்களாகக் கருதுகின்றனர்.

இத்தகைய மனநிலையை, தற்காலத்துக்கு ஏற்றவாறு, தலித் (ஒடுக்கப்பட்ட சமூகம்), பார்ப்பனரல்லாதவர், பார்ப்பனர் என மூன்று வகைகளாக பிரிக்கும் பிரிவினைவாத முறையை பாஜகவின் இந்துத்துவ அரசியல் வெளிச்சமிட்டு காட்டி வருகிறது.

அரசியல் தேவைகளுக்காக, திரெளபதி முர்மு என்ற பழங்குடி இனத்தவரை இந்தியக் குடியரசுத் தலைவர் ஆக்கிய பாஜக, புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது அழைப்பு விடுக்காமல் அவரை புறக்கணித்தது. இந்தியாவிலேயெ முதல் குடிமகள் என்ற பொறுப்பில் உள்ள ஒருவரை, புறம்தள்ளி நடைபெற்ற திறப்பு விழா கடும் சர்ச்சைக்குள்ளானது.

முதல் குடிமகள் மட்டுமல்ல, இந்திய மக்கள்தொகையின் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பிரிவையும் புறக்கணித்து அவமதிக்கும் வரலாறு கொண்டதே இந்துத்துவ அரசியல்!

இந்தியா, மதச்சார்பின்மை கொண்ட நாடு என்கிற இஸ்லாமியரின் நம்பிக்கையை தகர்த்து ராமர் கோவில் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல், ராமர் கோவில் திறப்பு விழாவை நோக்கி இந்துத்துவம் தன் அரசியலை வேகமாக நகர்த்தி வென்றிருக்கிறது.

சர்ச்சைகளிலேயே பிறந்து சர்ச்சைகளிலேயே வளர்ந்தும் வரும் பாஜக தற்போது அறிவித்திருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிலும் சர்ச்சை இல்லாமலில்லை.

ராமர் கோவில் திறப்பு நாள் (ஜனவரி 22), நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில், இது மத ஆதிக்க நிகழ்வு மற்றும் அரசியல் நிகழ்வு என பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து, நிகழ்வில் கலந்துக் கொள்ள மறுத்து வருகின்றனர். அவ்வரிசையில் இந்துத்துவத்தின் ஆணி வேராகக் கருதப்படும் சங்கராச்சாரியார்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்திருப்பது பேச்சுபொருளாகி உள்ளது.

சங்கராச்சாரியார்களின் கோபத்துக்குக் காரணம், ராமர் கோவில் திறப்பாளராக மோடி (பார்ப்பனரல்லாதவர்) இருப்பதே என்றும் கருத்துகள் பரவி வருகின்றன.

இந்தியக் குடியரசுத் தலைவர் என்றாலும் திரெளபதி முர்மு பழங்குடி இனத்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டதை போல், இந்துத்துவ கருத்துகளை முழுவதும் உள்வாங்கியிருக்கும் ஆனானப்பட்ட மோடியே என்றாலும் பார்ப்பனரில்லை என்பதால் அவர் கோவிலை திறக்கக் கூடாது என கோபம் கொள்கிறது இந்துத்துவம்.

ஆக, ஒருவர் கருத்தியல் அளவில், பார்ப்பனியத்தை தூக்கி சுமந்தாலும், அவர் பிறப்பால் வேறு எனில், அவரை ஒடுக்கும் நிலையே தங்களின் அரசியல் என ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் தெளிவாக இந்த சர்ச்சையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறது.