India

“போராடுபவர்கள் கிரிமினல்களே..” - மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஆளுநர் பரபரப்பான கேரளா - நடந்தது?

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். இதனை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி கேட்டு குட்டு வைத்துள்ளது.

மேலும் மாநில ஆளுநர்கள் அம்மாநில மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் உள்ளிட்ட ஆளுநர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் சில இடங்களுக்கு செல்லும்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் கருப்பு கொடி காட்டி தங்கள் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகானுக்கு அம்மாநில மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவித்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தன்னை தாக்க சதி திட்டம் தீட்டுவதாக பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அம்மாநில ஆளுநர். அதோடு இதற்கு போலீசும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டை அவர் முன்வைத்த நிலையில், அதற்கு போலீசார் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, சம்பவத்தன்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் டெல்லி செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு எதிராக அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் கொடி காட்டி போராட்டம் செய்தனர். மேலும் அவரது காரின் முன்னாள் சென்றும் கோஷம் எழுப்பினர்.

இதனை கண்ட ஆரிஃப் கான், மாணவர்களை கிரிமினல் என்று வசைபாடியதுடன், காரில் இருந்து இறங்கி அவர்களை திட்டி எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த சம்பவத்தினின்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை தாக்குவதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்களை வைத்து சதி திட்டம் தீட்டுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் திருவனந்தபுரத்தின் சாலைகள் ரௌடிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக விமர்சித்த ஆளுநர் ஆரிஃப் , அவர்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும், தான் வந்த காரை 2 புறமும் இருந்து தாக்கியதாகவும் தெரிவித்தார். அதோடு முதலமைச்சரின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

ஆனால் ஆளுநர் ஆரிஃபின் இந்த பகிரங்க குற்றச்சாட்டை அம்மாநில போலீசார் மறுத்துள்ளது. ஆளுநரின் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மறித்ததாகவும், ஆளுநர் கூறியதுபோல் 2 புறம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த செயலில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மற்ற சம்பவங்களில் கருப்புக் கொடிகள் மட்டுமே காட்டப்பட்டதாகவும், அதில் ஈடுபட்ட 10-12 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆளுநரின் இந்த பகிரங்க பொய்யான குற்றச்சாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு உரிமைக்காக போராடிய மாணவர்களை கிரிமினல் என்று வசைப்பாடியதற்கும், ஆளுநர் ஆரிஃப் முகமதுகானுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ் பவன் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஆளுநர் பல்வேறு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அது உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டிஜிட்டல் லாக்கரில் இருக்கும் தகவல்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை?: ஒன்றிய அரசுக்கு கனிமொழி சோமு கேள்வி!