India

ஜம்மு காஷ்மீரில் ரணங்கள் ஆற்றப்பட வேண்டும்: 370 தீர்ப்பில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கருத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949-ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதியோடு அது நிறைவேறியது. அதோடு நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு அறிவித்தது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரணங்கள் ஆற்றப்பட வேண்டும் என 370 செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பில் சஞ்சய் கிஷன் கவுல் கருத்து செய்துள்ளார்.

அதில், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ராணுவம் அரசின் எதிரிகளுடன்தான் போரிட வேண்டும். மாநிலத்தின் சட்ட ஒழுங்கை காக்க அது வந்து நிற்கக் கூடாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பெரும் விலையைக் கொடுத்திருக்கின்றனர். அப்பகுதியின் மக்கள் சந்தித்த துயரங்கள் என்னுள் கோபத்தை வரவழைத்ததை தவிர்க்க முடியவில்லை. விளைவாகத்தான் இந்த உரை.

அநீதி மீண்டும் தொடரக்கூடாது. அப்பகுதியின் பண்பாடான உடன் வாழ்தல், சகிப்புதன்மை மற்றும் பரஸ்பர மதிப்பு ஆகியவை தொடரப்பட வேண்டும். 1947ம் ஆண்டில் நேர்ந்த பிரிவினை கூட ஜம்மு காஷ்மீரின் மதரீதியிலான ஒற்றுமையை பாதிக்கவில்லை. முதல் கட்டமாக ஜம்மு காஷ்மீரில் அரசு நடத்திய வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை அது ஒப்புக் கொள்ள வேண்டும்.

பாரபட்சமற்ற உண்மை கண்டறியும் குழு உருவாக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும். வரலாறு மறக்கப்படுவதற்கு முன் குழு அமைக்கப்பட வேண்டும். ஒரு மொத்த தலைமுறை அவநம்பிக்கை உணர்வுடன் வளர்ந்திருக்கிறது. குழுவின் விசாரணை, குற்ற விசாரணையாக மாறாமல், உரையாடலுக்கான தளமாக அமைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?