India
தெலங்கானா தேர்தல் : “ஏமாற்றம் அளித்துள்ளது” : தோல்வியை ஏற்றுக்கொண்ட BRS.. KTR பதிவால் தொண்டர்கள் சோகம் !
கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது.
இந்த சூழலில் 5 மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே கட்டமாக டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 4-ம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கை தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மீதமுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் இதுவரை சுமார் 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போல் அம்மாநில ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இதில் அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் காஜவேல் மற்றும் காமாரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் காமரெட்டி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தெலங்கானா காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தொடர்ந்து தற்போது வரை முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை கைப்பற்றி வருவதால், இதில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று பல்வேறு அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அம்மாநில அமைச்சரும், BRS கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், BRS கட்சி தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.டி.ராமாராவ் வெளியிட்டுள்ள X வலைதள பதிவில், "பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய தெலங்கானா மக்களுக்கு நன்றி. இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு கவலையளிக்கவில்லை; ஆனால் இது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் நாங்கள் வருவோம். தெலங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளது. தெலங்கானா மாநிலம் பிரிந்து 3-வது தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!