India

நியாயம் கேட்ட பெண்.. பிட்புல் நாயை ஏவி கடிக்க வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. டெல்லியில் அதிர்ச்சி! |VIDEO

டெல்லியில் அமைந்துள்ள ஸ்வரூப் என்ற நகரில் ரியா தேவி என்பவர் வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவரது அருகிலேயே மற்றொரு வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் பிட்புல் என்ற வகை நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த சூழலில் அந்த நாய், ரியா தேவி வீட்டின் முன் வந்து மலம், சிறுநீர் கழித்துள்ளது.

இதனை சிசிடிவி மூலம் அறிந்துகொண்ட ரியாவுக்கு, அந்த நாயை அதன் உரிமையாளர் வேண்டுமென்றே அவிழ்த்து விட்டு இதனை செய்ய தூண்டியது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த ரியா, அந்த நபரின் வீட்டில் போய் சண்டையிட்டுள்ளார். மேலும் அந்த அசுத்ததை சுத்தம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்த நபர் அதனை செய்ய முடியாது என்று திமிராக மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், தனது பிட்புல் நாயை அவிழ்த்து விட்டு, ரியாவையும் தள்ளி விட்டுள்ளார். இதில் ரியா கீழே விழ, அந்த நாய் அவர் மீது பாய்ந்து கடிக்க தொடங்கியது. இதனால் அலறிய ரியா தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சுமார் 5 இடங்களில் நாய் கடித்துள்ளதால் கடும் காயமடைந்த ரியாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், அந்த நபர் ஏற்கனவே மற்றவர்களிடமும் சண்டையிட்டு வருவதாகவும், இதனால் அவருக்கும் அவரது நாய்க்கும் பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் நாயை அவிழ்த்து விட்டதும், அந்த பெண்ணை தள்ளி விட்டதும் தொடர்பான சிசிடிவி காட்சியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு இணையவாசிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிட்புல் நாய் என்பது நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான விலங்காகும். முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே இந்த வகை நாயை இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் பிட்புல் நாய் வளர்க்க தடையில்லை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இந்த நாய்களை வீட்டில் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காய்கறி வியாபாரி TO மோசடி பேர்வழி.. 10 மாநிலங்களில் வழக்குகள்.. 6 மாதங்களில் ரூ.21 கோடி ஏமாற்றிய இளைஞர்!