India

ராஜஸ்தான் : வழியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்கள்.. சுதாரித்த ஓட்டுநர் : இரயிலை கவிழ்க்க சதி! | VIDEO

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

அண்மையில் கூட சென்னை - நெல்லை உட்பட தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் என நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த சூழலில் ராஜஸ்தானில் உள்ள வந்தே பாரத் இரயிலை கவிழ்க்க மர்ம கும்பல் சதி திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தானின் கங்கரர் - சோனியானா பிரிவில் உள்ள பாதையில் வந்தே பாரத் இரயில் செல்லும் வழியில் ஜாக்கிள் பிளேட்டில் சிறு சிறு கற்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை கண்ட சிலர் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையில், பாதையில் கற்கள் இருந்ததும், வேறு பகுதியில், இரும்பு கம்பிகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அது அகற்றப்பட்டு இரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் இரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும் பயணிகள் அச்சத்தில் இருந்தனர். காலை சுமார் 10 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக வந்தே பாரத் இரயில்கள் மாடுகள் முட்டி சேதமடைவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாக காணப்பட்டது. மேலும் பழி வாங்குவதற்காக ஒருவர் வந்தே பாரத் இரயில் மீது கற்களையும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.