India

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்?.. மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இவர்களை நியமிப்பதில் ஒன்றிய அரசு அமைதியாக இருக்கிறது. இந்த நியமனங்களில் ஒன்றிய அரசின் கருத்து என்ன என்று தெரிந்தாலாவது நாங்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்றாவது எடுக்க முடியும்.

நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக 26 பரிந்துரைகள் வந்துள்ளது. அதேபோல் 9 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஒன்றிய அரசு ஏற்கவும் இல்லை, திருப்பி அனுப்பவும் இல்லை. அமைதியாக இருக்கிறது. இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த வழக்கு குறித்து 10 நாட்களுக்கு ஒருமுறை நீதிபதிகளின் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்புவோம் என கூறி வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.