India

அரசு மருத்துவரை அடித்தே கொன்ற பாஜக ஆதரவாளர்.. குமுறும் குடும்பம்.. உத்தர பிரதேசத்தில் தொடரும் கொடுமை !

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்போரில் கன்ஷ்யாம் திவாரி என்பவர் வசித்து வருகிறார். 53 வயதான இவர் ஒரு அரசு மருத்துவர் ஆவார். இந்த சூழலில் இவர் நேற்று மாலை நேரத்தில் தனது மருத்துவமனை அருகே மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில், நிலத்தகராறில் பாஜக ஆதரவாளர் ஒருவர் தாக்கியுள்ளது தெரியவந்தது.

அதாவது மருத்துவர் கன்ஷ்யாமுக்கும் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் நாராயண் சிங் என்பவரது மகன் அஜய் நாராயண் சிங் என்பவருக்கும் நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே மோதலும் இருந்துள்ளது. மேலும் அஜய், மருத்துவரை அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவரை அஜய் தாக்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று மாலை நேரத்தில் வீட்டில் சாப்பிட்டு விட்டு, அவரது மனைவியிடம் இருந்து ரூ.3000 பெற்றுக்கொண்டு வேலை விஷயமாகி வெளியே சென்றுள்ளார் மருத்துவர். இதனை முழுமையாக நோட்டமிட்டு கொண்டிருந்த அஜய் மற்றும் அவரது கூட்டாளிகள், மருத்துவரை அவரது மருத்துவமனை அருகே வைத்து மடக்கி கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை சரமாரியாக கட்டை உள்ளிட்டவைகளில் தாக்கியதில் , அவரது உடலில் உள்ள எலும்புகள் நொறுங்கி உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதோடு குற்றம்சாட்டப்பட்ட அஜய் சிங் என்பவர் உள்ளூர் பாஜக நிர்வாகிக்கு நெருங்கிய சொந்தம் என்றும் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜய்க்கு ஆதரவாக பாஜகவினர் உள்ளதாக தெரிகிறது. இதனால் போலீசார் நடவடிக்கை எடப்பரா என்ற சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மருத்துவரின் மனைவி நிஷா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலத்தகராறு காரணமாக அரசு மருத்துவரை பாஜக ஆதரவாளர் உட்பட சிலர் மருத்துவமனை அருகே அடித்து கொலை செய்த சம்பவம் உ.பி-யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”நாடாளுமன்றம் குப்பைத்தொட்டியல்ல”: பா.ஜ.க MP-யின் பேச்சுக்கு கவிப்பேரரசு வைரமுத்து கண்டனம்!