India

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு பின்னால் இருக்கும் பாஜகவின் சதி.. புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி MP!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குக் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பா.ஜ.க தேர்தலுக்காகவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அரசியலாக்குகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா அமல்படுத்துவதற்கு முன்பு இரண்டு நிபந்தனைகளை ஒன்றிய அரசு முன்வைத்துள்ளது. ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு. மற்றொன்று தொகுதி மறுவரையறை. இதைச் செய்ய பல ஆண்டுகள் ஆகும். இதன் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.க சொல்கிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்குப் பிறகு அல்ல, இப்போதே அமல்படுத்த முடியும். பா.ஜ.அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை அமல்படுத்துவதை நீக்கி விட்டு உடனே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதோடு OBC பிரிவினர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்தியாவில் எத்தனை OBCக்கள் உள்ளனர்? என்பதைக் கண்டறிய வேண்டும். OBC க்களுக்காக தான் அதிகம் பாடுபடுவதாகப் பிரதமர் கூறுகிறார். ஆனால் ஒன்றிய அரசின் துறை செயலாளர்களில் 90 பேரில் 3 பேர் மட்டுமே OBC சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது ஏன்?. நாட்டின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 5% மட்டுமே OBCக்கு. மற்ற நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் எல்லாம் ஆதிக்க சாதியினரிடமே இருக்கிறது.

மக்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையைத் திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: அம்பேத்கர் குறித்த அவதூறு பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு? - நீதிமன்றத்தில் கெஞ்சிய RBVS.மணியன்!