India

வேலை வாங்கி தருவதாக மோசடி.. வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த கும்பல் - சிக்கியது எப்படி ?

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மீகி என்ற வாலிபர். இவர் தனது ஊரில் இருந்து வேலைக்காக வெளியூருக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி தனக்கு மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே, வால்மீகி தனது சக நண்பராகிலான வினய்குமார், பவன்குமார், ஜிதேந்திர குமார், சித்தார்ய குமார், அசோக்குமார் உள்ளிட்டோருடன் கடந்த 14-ம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கே எதுவும் சரியாக இருக்கவில்லை என்பதால், என்ன செய்வதென்று யோசித்தபோது, பீஹாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் இவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் இவர்களிடம் நல்லவையாக பேசி, தான் வேலை வாங்கி தருவதாக கூறி, ஈரோட்டுக்கு வர கூறியிருக்கிறார். அதன்படி வால்மீகி தனது சக நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

ஈரோடு இரயில் நிலையம் சென்றபோது, அங்கே தனது நண்பர்களுடன் காத்திருந்த பிபீன், அவர்கள் அனைவரையும் வேனில் அழைத்து சென்றுள்ளார். அவ்வாறு சென்ற அவர், அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதாவது ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும், கொடுத்தால்தான் தங்களை விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதோடு அனைவரையும் கடுமையாக தாக்கியும் உள்ளனர். இதனால் வேறு வழியின்றி ஊரில் இருக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொண்ட அவர்கள், இந்த கும்பல் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த கும்பல், கடத்தி வைத்திருந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்களை டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கொண்டு சென்று விட்டு உள்ளனர்.

அங்கிருந்து வேறு வழியின்றி அனைவரும் உடலில் காயங்களுடன் வழிப்போக்கர்களிடம் லிப்ட் கேட்டு சென்னை வந்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கு மிகவும் காயம் ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கே சிகிச்சை பெற்ற பிறகு, இந்த சம்பவம் குறித்து வால்மீகி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அவரளித்த புகாரை சென்னை போலீசார், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பணம் அனுப்பிய எண்களை வைத்து வங்கி கணக்கு உள்ளிட்டவையை ஆய்வு செய்து, அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

தொடர்ந்து பீகாரை சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ், சசிகுமார், சுபாஷ், தமிழ் செல்வன், கண்ணன், பூபாலன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் அனைவர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்துள்ளனர். அதோடு இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டிய வடமாநில தொழிலாளர் உட்பட 7 பேரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி வருவோர்களுக்கு இதுபோல் ஏதேனும் நடந்தால் பயப்படாமல் போலிசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: ஓடி வந்த யானையை வீடியோ எடுத்த வனத்துறை ஊழியர்.. தவறி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன ?