India

தாய்க்கு பாலியல் தொல்லை.. தடுக்க சென்ற மகனுக்கு கத்தி குத்து.. மும்பையில் ஓடும் இரயிலில் நடந்த கொடூரம் !

அண்மைக்காலமாக இரயிலில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போதும் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது மகன் கத்தியால் குத்தப்பட்டு ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.

அமிர்தசரஸில் இருந்து மும்பை நோக்கி 29 வயது பெண் ஒருவர், தனது மகனுடன் இரயிலில் சென்று கொண்டிருந்தார். விரைவு இரயிலில் பயணித்த அவர், கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த பெண் தடுக்க முயன்றுள்ளார். இரவு சுமார் 8.30 மணியளவில் தாதர் இரயில் நிலையத்தில் ஏறிய அந்த நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை கண்ட அந்த பெண்ணின் மகன் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணையும் நகரும் இரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவரது கையில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அவர் அந்த மர்ம நபர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அது யார் என்ன என்று சிசிடிவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் மனோஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரிக்கையில், அந்த நபர் புனேவில் காவலாளியாக பணிபுரிந்ததும், அண்மையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும், எனவே அவர் மும்பையில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: புகார் பெட்டியில் கிடந்த கடிதம்.. ஆசிரியர் மீது 16 மாணவிகள் பாலியல் புகார்.. அதிர்ச்சிக்குள்ளான ஆசிரியர்!