India

மணிப்பூர் : பாஜக முதல்வரை விமர்சித்த இளைஞர் அடித்துக் கொலை.. போலிஸாரின் கண் முன்பே நடந்த கொடூரம் !

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த வீடியோ உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மணிப்பூர் கலவர விவகாரத்தில் பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்து விமர்சித்த மணிப்பூர் இளைஞர் போலிஸார் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ளது. Hanglalmuan Vaiphei என்ற 21 வயது இளைஞர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ.புவியியல் படித்து வந்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் தொடங்கியதும், அதனை கட்டுபடுத்தாத மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங்கை விமர்சித்தும், மெய்தி சமூகத்தை விமர்சித்தும் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அவரை விசாரணைக்காக போலிஸார் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து மாஜிஸ்திரேட்டிடம் நீதிமன்ற காவலுக்கு அனுமதி பெற்று கடந்த மே-4-ம் நாள் அந்த இளைஞரை சிறைக்கு அழைத்துசென்றுகொண்டிருந்த போது, காவல்துறை வாகனத்தை மறித்த மெய்தி சமூகத்தை சேர்த்த கும்பல் அந்த மாணவரை பிடித்து வெளியே இழுத்து அவரை அடித்து போலிஸாரின் கண் முன்பே கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், அந்த கும்பல் தங்களையும் தாக்கி அந்த இளைஞரை கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளது. இது போன்று தொடர்ந்து வெளியாகும் சம்பவம் மணிப்பூரில் நடக்கும் கொடூரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read: "அடுத்த மராட்டிய முதல்வரே" -அஜித் பவாருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் கலக்கத்தில் ஏக்நாத் ஷிண்டே !