India
“எங்க சமூகத்தையே கேவலப் படுத்திட்டான்”: பெண்கள் நிர்வாண VIDEO விவகாரம் - குற்றவாளி வீட்டை எரித்த பெண்கள்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்து வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் சுமார் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மெளனம் காத்து வரும் ஒன்றிய அரசுக்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், அங்கு 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை, மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.
மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வீடியோ இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் சூடு பிடித்ததை அடுத்தே, பிரதமர் மோடி தனது மெளனத்தை கலைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எனினும் இது வரை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சென்று கூட சந்திக்கவில்லை. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்துள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குற்றவாளி ஹேராதாஸின் வீட்டை கிராம பெண்கள் அடித்து நொறுக்கியதோடு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கு அவமானத்தை தேடி தந்துள்ளதாக, மெய்தி சமூக பெண்களே குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தி தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தங்களை போலீசாரே குற்றவாளிகளிடம் அழைத்து சென்றதாகவும், தங்களை அந்த நிலைக்கு கொண்டு சென்ற கொடூர காரர்களின் கும்பலில் தனது சகோதரனின் நண்பரும் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?