India
திடீரென ஏற்பட்ட மின்கசிவு.. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவ ஊழியர்கள் !
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட ஹிம்ஸ் (HIMS) என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பலரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை சிறப்பு பிரிவு (ஐ.சி.யூ.) உள்ளது. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், உடல் நலக்குறைவால் பிறக்கும் குழந்தைகள் இந்த பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். .
அந்த வகையில் ஹாசன் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்து சில நாட்களே ஆன 24 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. இந்த சூழலில் இன்று காலை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவு காரணமாக அந்த தீவிர சிகிச்சை பிரிவே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கதறி அழுதன.
இதனை கேட்டு குழந்தைகளின் பெற்றோர்களும், அங்கு இருந்தவர்களும் பதற்றம் அடைந்தனர். மேலும் இந்த நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்த 24 பச்சிளம் குழந்தைகளையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகே பெற்றோரும், அங்கிருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவும், புகைமூட்டமும் சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹாசன் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் 24 பச்சிளம் குழந்தைகளும் உயிர் காப்பற்றப்பட்டது. இதனால் மருத்துவ ஊழியர்களுக்கு அங்கிருந்த பொதுமக்கள், பெற்றோர் என அனைவரும் நன்றி தெரிவித்ததோடு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அறிந்ததும் மருத்துவமனையின் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் எவ்வாறு மின்கசிவு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் மின்கசிவு திடீரென ஏற்பட்டதால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகளை மருத்துவ ஊழியர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!