India

இளம்பெண் சுட்டுக்கொலை.. உடலுடன் 7 மணிநேரம் சுற்றித்திரிந்த பாஜக பிரமுகர்.. ம.பி.யில் அதிர்ச்சி !

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் பிரயன்ஷ் விஸ்வகர்மா (Priyansh Vishwakarma). பாஜகவில் இவர் முக்கிய பொறுப்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறும் நிலையில், கடந்த 19-ம் தேதி அங்கே பிரபல மாடலாக அறியப்படும் வேதிகா தாக்கூர் என்ற 25 வயது இளம்பெண் பிரயன்ஷை காண அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குள்ளும் என்ன விவகாரம் என்று தெரியவில்லை, திடீரென பிரயன்ஷ் தன்னை காண வந்த வேதிகாவை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கிய வேதிகாவை அவர் தனது காரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 26) பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் வேதிகா உயிரிழப்பதற்கு முந்தைய தினம் வேதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது இந்த நிலைமைக்கு காரணம் பிரயன்ஷ் விஸ்வகர்மா தான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் உடனடியாக பாஜகவை சேர்ந்த பிரயன்ஷ் விஸ்வகர்மாவை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது.

இந்த விவகாரம் சூடு பிடிக்கவே, காவல்துறை அவரை கைது செய்து, அவர்மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், வேதிகாவை சுட்டதும் அவர் இறந்துவிட்டதாக எண்ணி, அவரது உடலை வைத்து அவரது காரிலே சுமார் 7 மணி நேரம் சுற்றியிருக்கிறார். மேலும் அவரது உடல் உள்ளிட்ட ஆதாரங்களை எப்படி அழிக்கலாம் என திட்டம் தீட்டியிருக்கிறார்.

ஆனால் வேதிகா உயிருடன் இருப்பதாய் அறிந்த பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு தனது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் சென்று அனுமதித்து விட்டு திரும்பியுள்ளார். அவரது காரில் பாஜக கொடி இருந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிரவலையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த விவகாரம் பெரியதாக மாறிய நிலையில், பிரயன்ஷ் விஸ்வகர்மா பாஜகவை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பாஜகவில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்றும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிரயன்ஷ் விஸ்வகர்மாவின் காரில் பாஜக கொடி இருப்பது மட்டுமின்றி, அவர் உருவம் பொறித்த பாஜக பேனரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராகுல் காந்தி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக IT பிரிவு தலைவர்: வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலிஸ்