India

500 மீ பள்ளத்தில் விழுந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி: கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் என்ற பகுதியை அடுத்து அமைந்துள்ளது ஹோகாரா என்ற இடம். இங்கு பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் தினமும் வருகை தந்து தரிசனம் பெறுவர். இதற்காக பல்வேறு பகுதி, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். எப்போதும் விஷேசமாக காணப்படும் இந்த கோயில் மிகவும் பிரபமலமான கோயில்களில் ஒன்று.

இந்த சூழலில் இந்த கோயிலுக்கு பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள சாமா என்ற பகுதியில் இருந்து குடும்பம் ஒன்று சம்பவத்தன்று காலை நேரத்தில் தரிசனம் செய்ய வந்துள்ளது. பொலிரோ காரில் 12 பேர் கொண்ட குடும்பம் ஒன்றாக பயணம் செய்துள்ளது. அப்போது அந்த கார் பித்தோராகர், ஹோக்ரா குடோன் அருகே சென்றபோது வளைவில் சென்ற கார் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது.

500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் அந்த கார் விழுந்ததை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கிஷன் சிங் (65), உமேத் சிங் (29), நிஷா (23), குந்தன் சிங் (64), தரம் சிங் (74), சுரேந்திர சிங் (38) என வாகனத்தில் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் இரண்டு பேர் இராணுவத்தில் இருந்தவர்கள் ஆவார். இதையடுத்து அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பள்ளத்தாக்கில் விழுந்து 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரகாண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கத்தி முனையில் ராப் இசைக் கலைஞர் கடத்தல்.. 10 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: சினிமாவை மிஞ்சிய சம்பவம்!