India

முஸ்லீம் இட ஒதுக்கீட்டு ரத்து: “நீங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு”-அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு பல்வேறு குற்றங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. பாசிச சிந்தனையோடு ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் பாஜக, மக்களுக்கு தினந்தோறும் ஏதுனும் இன்னல்களை கொடுக்கிறது.

கேஸ், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல வழிகளில் இந்திய மக்களுக்கு பாஜக இன்னல்களை கொடுக்கிறது. அதுமட்டுமின்றி மதம் சார்ந்த பிரச்சாரங்களையும், சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு பல இடையூறுகள் கொடுத்து வருகிறது.

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து பிரச்னை செய்து வரும் அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒடுக்குமுறை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதில் இருந்து எப்படியோ தங்கள் பலத்தை பயன்படுத்தி தப்பித்து விடுகிறது. இதன் விளைவாகவே, பாஜகவுக்கு எங்கள் வீடுகளில் அனுமதி இல்லை என்று மக்கள் தங்கள் வீட்டு வாசலில் எழுதி வைத்தார்கள்.

மேலும் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறது பாஜக. நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களுக்கு பாஜக தொல்லை கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, இஸ்லாமிய, இந்து சமூகங்களுக்கு இடையே கலவரத்தையும் மூட்டி வருகிறது. கடந்த ஆண்டு கூட மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தது.

இந்த விவகாரம் உலக அளவில் பேசப்பட்டு பலரது கண்டனங்களையும் குவித்தது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வந்த பாஜக அரசு, கடந்த மாதம் கர்நாடகாவில் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டையும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த இஸ்லாமிய மக்களை, EWS என்று சொல்லப்படும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவான 10% இடஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படுவதாக பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது.

இதற்கு அங்கிருக்கும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தினர். இருந்தபோதிலும் அதனை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 9 ஆம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அது வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் கர்நாடகாவில் நாளை (மே 10) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நேற்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், "அரசியல் சாசனத்தில் அனுமதிக்கப்படாத இட ஒதுக்கீட்டை தான் கர்நாடகா பாஜக ரத்து செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஓய்வதற்குள் சித்தராமையா, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீட்டை 4-ல் இருந்து 6 சதவீதமாக உயர்த்தினால் அவர்கள் யாருடைய சலுகையில் கைவைக்க வேண்டியிருக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்" என்றார். கர்நாடகாவில் 4% இட ஒதுக்கீடை ரத்து செய்ததற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமித்ஷாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (மே 9) இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கே.எம்.ஜோசப் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 4% இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில்,அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள் என்று புகார் தெரிவித்தார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும் போது முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி இதுபோன்று எப்படி பேச முடியும்? இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி கண்டனம் தெரிவித்தனர். அப்போது ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர், அமைச்சர்கள் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கூடாது என்றுதான் பேசியுள்ளதாக விளக்கம் அளித்தார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் தொடர்ந்து முஸ்லீம் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பேசக்கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் 4% இட ஒதுக்கீடு ரத்துக்கு தடைவிதித்த உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also Read: ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பா.ஜ.கவால் எதுவும் செய்ய முடியாது”.. தயாநிதி மாறன் MP பேச்சு!