India

உ.பி: கேமரா முன் பேட்டி கொடுத்த முன்னாள் MP சுட்டுக்கொலை.. வேடிக்கை பார்த்த போலிஸ்..கொண்டாடிய பாஜகவினர்!

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டுமுதலே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

அதேபோல், எதிர்க்கட்சி மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்க நடத்தப்படும் தாக்குதல் மற்றும் கொலை போன்ற வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜூபால். இவர் கடந்த 2005ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் உமேஷ்பால் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அச்சுருத்தல் உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்த போதும் அது மறுக்கப்பட்ட நிலையில், உமேஷ்பாலை மர்ம கும்பல் நாட்டுவெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை எம்பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இரண்டு நாட்களுக்கு முன்னர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது தந்தையும், அவரின் சகோதரரும் கொலை செய்யப்பட்டது உத்தரப்பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தின்போது போலிஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: பாஜகவிலிருந்து முன்னாள் முதல்வர் விலகல்.. ரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டல்.. பரபரக்கும் கர்நாடக அரசியல் !