India

“எனக்கு இதுதான் ஆசை.. ரத்தன் டாட்டாவை ரொம்ப பிடிக்கும்..” - மிஸ் இந்தியா அழகி நந்தினி Open டாக் !

ஆண்டுதோறும் இந்தியாவில் 'மிஸ் இந்தியா' படத்துக்கான போட்டி நடைபெறும். இந்த போட்டியில் திருமணமாகாத இளம்பெண்கள் கலந்துகொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நிலையில், முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற 'பெமினா மிஸ் இந்தியா 2023' போட்டியின் நிகழ்வின் இறுதிச் சுற்று நேற்று (ஏப்ரல் 15) மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குமன் லம்பாக் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் நந்தினி குப்தா பட்டத்தை தட்டி சென்றுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இரண்டாவது இடத்தை டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா என்பவரும், மூன்றாவது இடத்தை மணிப்பூரை சேர்ந்த தவுனோஜம் ஸ்டெரலா என்பவரும் பிடித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டிகளில் ராஜஸ்தான் கடந்த 2019-ல் முதல் முறையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்போதுதான் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையை தேர்ந்தெடுத்த இவர், பின்னர் அழகி போட்டிகளிலும் பங்கேற்க தன்னை தயார் படுத்தி வந்தார். இந்த சூழலில் இந்தாண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் வெற்றி பெற்றதை அறிவிக்கப்பட்டதை அடுத்து மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், "உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ratan Tata

இந்த நிலையில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி தனக்கு ரத்தன் டாடா மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நந்தினி, "என்னுடைய இலக்கு ஒரு தொழில் தொடங்கி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவது தான். பலரது கனவுகளை நிறைவேற்றுவதில் ஒரு உந்துதலாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ரத்தன் டாடாதான் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் மனித குலத்திற்காக அனைத்தும் செய்கிறார். தனது பெரும்பாலான சொத்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளார். மில்லியன் கணக்கான மக்களால் நேசிக்கப்படுபவராக இருக்கிறார்" என்றார்.

மேலும் "மிஸ் வேர்ல்டு 2000 பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவை எனக்கு மிகவும் பிடிக்கும். இளம் வயதிலேயே சர்வதேச அளவில் பட்டம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். தற்போது சமூகப் பணிகளிலும், நடிகையாகவும் ஜொலித்து கொண்டிருக்கிறார். பலருக்கு உந்துதலாக உள்ளார். சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கு அவர் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்" என்றார்.

அதோடு "கோட்டா டோரியா (Kota Doriya ) என்ற துணி வகை எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் பின்னால் கடின உழைப்பை செலுத்தி கொண்டிருக்கும் பெண்களுக்கு போதிய அங்கீகாரமும், பொருளாதார மேம்பாடும் கிடைக்கவில்லை. அதை மாற்றி சரியான வழித்தடம் அமைத்து தர விரும்புகிறேன்." என்று கூறினார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற இவருக்கும், 2-வது, 3-வது இடத்தை பிடித்த மற்ற அழகிகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Also Read: தொகுப்பாளர் TO Miss India.. 19 வயதில் சாதனை படைத்த இளம்பெண்.. யார் இந்த நந்தினி குப்தா ?