India

பேருந்தில் சீட் பிடிக்கும் போது நடந்த விபரீதம்.. 30 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை காட்டி கொடுத்த CCTV!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே பகுதியில் தங்க நகைக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் விக்னேஷிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி விக்னேஷ் தனது ஓட்டுநர் ஏழுமலையிடம் தங்க நகைகளைக் கொடுத்து லேசர் கட்டிங் செய்வதற்காகச் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சென்னை வந்த ஏழுமலை, தனது வேலைகளை முடித்து விட்டு இரவு திருவண்ணாமலைக்கு செல்லவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, ஏழுலை தனியார் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மேற்படி தங்க நகைகள் அடங்கிய பையை ஜன்னல் வழியாகப் பேருந்தின் உள்ளே இருக்கையில் போட்டு விட்டு, சுற்றி வந்து பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது இருக்கையில் வைத்த பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிறகு 30 சவரன் தங்க நகைகள் இருந்த பையை காணவில்லை என ஏழுமலை தனது முதலாளியிடம் தெரிவித்துள்ளார். பிறகு விக்னேஷ் இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் பையை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர் குறித்து விசாரணை செய்ததில், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30.5 சவரன் தங்க நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்திரசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் போலிஸார் சிறையில் அடைத்தனர்.

Also Read: காரை பின்னோக்கி வேகமாக இயக்கிய தாய்மாமா.. 2 கார்களுக்கு இடையே நசுங்கிய சிறுவன்: மருத்துவமனை வாசலில் சோகம்