India

ம.பி : தள்ளிப்போன முதலிரவு.. நகைகளோடு ஓடிப்போன மணமகள்.. கைது செய்யப்பட்ட புரோக்கர்.. நடந்தது என்ன ?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான இந்தூரில் இளைஞர் ஒருவர் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். அந்த இளைஞருக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து திருமண புரோக்கர் ஒருவரை அணுகியுள்ளனர்.

திருமண புரோக்கரும் பெண் ஒருவரின் புகைப்படத்தை இளைஞரின் குடும்பத்துக்கு காட்டிய நிலையில், பெண்ணை அனைவர்க்கும் பிடித்துபோனதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் முதலிரவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமகன், மணமகள் ஆகியோர் முதலிரவு அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அங்கு மணமகள் தனது மாதவிடாய் ஏற்பட்டதாகவும் இதனால் 4 நாட்கள் முதலிரவு கொண்டாட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் முதலிரவு நடக்காமல் இருந்துள்ளது.ஆனால், இரண்டு நாட்களில் அந்த பெண் திடீரென காணாமல் போயுள்ளார். மேலும், வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் மணமகள் குறித்து அனைத்தும் அறிந்த திருமண புரோக்கரை பார்த்து இதுபற்றி கூற முடிவு செய்துள்ளனர்.

அதன்படி திருமண புரோக்கரின் வீட்டுக்கு சென்றபோது அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்துள்ளது. காணாமல் போன மணப்பெண் நகைகளோடு திருமண புரோக்கரின் வீட்டில் இருந்துள்ளார். அதன் பின்னரே புரோக்கரும் அந்த பெண்ணும் நகைக்காக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த இளைஞரின் குடும்பத்தினர் அவர்களை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து மோசடி வழக்கு பதிவு செய்த போலிஸார் இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா? -உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !