India

குற்றவாளியை கடத்திய போலிஸ்.. 40 லட்சம் கேட்டு குடும்பத்தாருக்கு மிரட்டல்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது மாரத்தஹள்ளி. இந்த பகுதியிலுள்ள காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் புலியின் நகம் மற்றும் புலித்தோல் விற்பதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது புலியின் நகம் மற்றும் புலித்தோல் விற்பதாக கூறி அங்கிருந்த நபர் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த குற்றவாளியை காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ அழைத்து செல்லவில்லை. மாறாகமாரத்தஹள்ளி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ரங்கேஷ், தலைமை காவலர் ஹரீஷ் மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து அந்த நபரை கடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு கொண்ட அவர்கள் தொலைபேசி வாயிலாக கடத்தப்பட்ட விவகாரத்தை கூறினர். மேலும் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டியும் உள்ளனர். இதையடுத்து பதறிப்போன குடும்பத்தினர் அருகில் இருந்த பாகலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது இந்த நபரை போலீசே கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியின் உத்தரவின் பேரில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் ஹரிஷ் மற்றும் இரண்டு காவலர்களை போலீசார் கைது செய்தனர். உதவி ஆய்வாளர் ரங்கேஷ் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறுகையில், “இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாகலூர் காவல் நிலையத்தில் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில், மாரத்தள்ளி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு இடத்தில் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது இந்த வழக்கில் பிஎஸ்ஐ மற்றும் சில ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. காணாமல் போன பிஎஸ்ஐ மற்றும் பிற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்”

மேலும், "சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஒருசில பணியாளர்களின் இத்தகைய இழிவான நடத்தை, துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடாது. எனவே, நாங்கள் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து, கைது செய்துள்ளோம். சில வழக்குகளில் அவர்களை பணிநீக்கம் செய்கிறோம்” என்றார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீசே கடத்தி 40 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !