India

மாசுபட்ட நாடுகள் பட்டியல்.. 5-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு சரிந்த இந்தியா.. ஆய்வில் தகவல் !

காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதை அறிவோம். காற்று மாசுபாடு காரணமாக உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் அகால மரணம் அடைகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது. வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலகின் 3-வது பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றியான இந்தியா, பருவநிலை மாற்ற விளைவுகளால் எதிர்கொண்ட கடுமையான பாதிப்பினால் தற்போது முதல் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த இலக்கை நோக்கி செல்வதில் பல தடங்கல்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 5-வது இடத்திலிருந்த இந்தியா 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் I-Q-AiR நிறுவனம் 131 நாடுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 5-வது இடம் வகித்த இந்தியா, தற்போது 8-வது இடத்திற்கு சரிந்துள்ளது. தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53 புள்ளி 3 மைக்ரோகிரமாக குறைந்தபோதும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

இதேபோல், மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இப்பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்திலும், சீனாவின் ஹோடான் நகரம் 2-வது இடத்திலும் உள்ளன. அதனை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி உள்ளிட்ட 6 நகரங்கள், டாப் 10-இல் இடம்பிடித்துள்ளன.

Also Read: கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !