India
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ.. நடிகர்களை வைத்து வீடியோ எடுத்த YouTuber மேல் வழக்கு !
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலிஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ருபேஷ் குமார் என்பவரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (24) என்பவரும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலியான வீடியோக்களை பகிர்ந்ததாக வழக்கு பதிவு செய்து, ஜார்க்கண்ட் சென்ற தனிபடை போலிஸார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிஷ் காஷ்யப் செய்த போலி வீடியோ ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வரும் இவர் அதன்மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளார். தனது வருமானத்தை மேலும் கூட்டிகொள்ள தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான செய்தியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக பாட்னாவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருவரை படுகாயம் அடைந்தது போல் வேடமிட வைத்து தமிழ்நாட்டில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைத்துள்ளார். மேலும் இந்த காட்சிகளை மார்ச் 8-ம் தேதி ஹோலி பண்டிகை அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிவந்ததும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீகார் போலிஸார், ராகேஷ் திவாரி என்பவரை கைது செய்தனர். மேலும், மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது பதிவு செய்யப்பட்டு அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?