India

BBC ஆவணப்படம்.. ஒன்றிய மோடி அரசின் தடை குறித்து விசாரணைக்கு தயாரான உச்சநீதிமன்றம்: முழு விபரம்!

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிறுபான்மையினரான இசுலாமியர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

குஜராத் கலவரத்தின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்துவா கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, நீண்ட வருடங்களுக்கு பிறகு இது தொடர்பாகப் புகார் அளித்து வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில், இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய கொடுமையான குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, கடந்த 17-ம் தேதி “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” (India : The Modi Question) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியின் உண்மை முகம் அம்பலப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

பிபிசி வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்துள்ள ஒன்றிய அரசுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி, "உண்மையைத் தடுக்க முடியாது. அது எப்படியும் வெளியில் வந்தே தீரும். நீங்கள் எந்த தடை விதித்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி தொடர்பான இந்த ஆவணப்படம் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுவெளியில் மோடிக் குறித்தான ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

இப்படி இந்தியாவில் பெரும் பரபரப்பாக மோடி தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பாகம் பேசப்பட்டு வரும் நிலையிலும், ஒன்றிய அரசின் தடையையும் மீறி பிபிசி இந்த ஆவணப்படத்தின் 2வது பாகத்தை வெளியிட்டது.

இந்நிலையில் பிபிசி வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்தியாவில் பரபரப்பாகியுள்ளது. மேலும் நாளை முதல் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்துக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில், ஒன்றிய அரசின் நடவடிக்கை பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது எனக்கூறி ஒன்றிய அரசின் தடை உத்தரவை நீக்ககோரி எம்.எல் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி முறையிட்டபோது வழக்கைப் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழில் தீர்ப்பு மிகப்பெரிய சிந்தனை மாற்றம்.. அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம்” : முரசொலி