India

“ராமர் பாலத்தை ராமர் கட்டியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை..” - கைவிரித்த ஒன்றிய அரசு !

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் - இலங்கையின் மன்னார் இடையே தொடர்ச்சியான சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. இந்த கற்களால் உருவான மேடுகள் ஒரு பாலம் போல் தோற்றம் கொண்டுள்ளது. எனவே இதனை இதிகாசத்தில் வரும் கடவுள் ராமரால் உருவாக்கப்பட்டது என்றும், இலங்கையில் இருக்கும் சீதாவை ராமர் மீட்க செல்லும்போது அவரது வானரப் படைகள் எல்லாம் சேர்ந்து இந்த பாலத்தை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஏனென்றால் வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே ராமர் பாலம் இருக்கும் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கி.மீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும்.

அதோடு இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கும் வருவாய் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முயன்று வந்தது. ஆனால் சிலர் இந்த பாலம் கடவுள் ராமரால் கட்டப்பட்டது என்றும், இவ்வாறு செய்வது இந்து மதத்தினரை அவமானப்படுத்தும் செயல் என்றும், இது இந்து நம்பிக்கையை உதாசீனப்படுத்த படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கு எதிராகவும் கண்டனங்கள் எழுப்பினர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பூதாகரமாக வெடித்த நிலையில், அன்றைய முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் ராமர் என்ற ஒரு கடவுள் உண்மையிலே இருந்தாரா? அப்படி இருந்தால் அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்பதற்கு சான்று வேண்டும் என்று ஆவேசமாக கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே சேது சமுத்திர கால்வாய் திட்டம் தற்காலிமாக முடங்கிவிட்டது. பல ஆண்டு காலமாக இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கும் நிலையில், தற்போது வரை அந்த பாலத்தை ராமர் தான் கட்டினாரா என்றும், அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவியல் ரீதியாக யாரும் நிரூபிக்கவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஹரியானாவை சேர்ந்த பாஜக எம்.பி கார்த்திகேயன் சர்மா ராமர் பாலம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் ராமர் பாலம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் ராமன் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியவில்லை. சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றி தகவல் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 56 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் கடலில் இருக்கும் சரியான கட்டமைப்பு ஆராய்வது கடினமாக உள்ளது. அந்தப் பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறியீடு இருப்பதாக இப்போதைக்கு சொல்ல முடியும்" என்று பதிலளித்தார்.

முன்னதாக ராமர் பாலத்திற்கு எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒன்றிய அமைச்சரின் இந்த பதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சரின் இந்த பதிலால் ராமர் பாலத்தை ராமர் கட்டியதற்கான எந்த சான்றும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Also Read: “ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை ‘பெரியாரியம்’ சாய்த்தே தீரும்..” : பெரியார் நினைவு நாளில் முதல்வர் சூளுரை!