India

புல்டோசரை திருமண பரிசாக கொடுத்த மாமனார்.. காரணத்தை கேட்டு தலை சுற்றிப்போன விருந்தினர்கள் !

உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் வசித்து வருபவர் பரசுராம் பிரஜாபதி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவருக்கு நேகா என்ற ஒரு மகள் உள்ளார். அவருக்கும், கடற்படையில் பணிபுரிந்து வரும் யோகேந்திர பிரஜாபதி என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அப்போது திருமண சீராக, மாமனார் பரசுராம் தனது மகளுக்கு புல்டோசரை கொடுத்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் ஆச்சர்யத்தில் உறைந்துபோனார். ஏனென்றால் இதுவரை திருமணத்திற்கு பெண் வீட்டு தரப்பில் இருந்து பரிசாக புல்டோசரை கொடுத்ததாக செய்திகள் வெளிவரவில்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு என்பதால் அனைவரும் பூரித்து போனர். அதைவிட அதற்கான காரணத்தை கேட்டே அனைவரும் அதிர்ந்து போனர்.

இது குறித்து மாப்பிள்ளை யோகேந்திர பிரஜாபதி கூறுகையில், "எனது மாமனார் எங்களுக்கு திருமண சீராக ஒரு புல்டோசரை கொடுத்துள்ளார். அவரது இந்த பரிசு எங்களுக்கு மிகவும் ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பரிசு எதற்காக என்று எனது மாமனாரிடம் கேட்டபோது, அதற்கு அவர் ஒரு விளக்கம் அளித்தார். அதாவது அவரது மகளும் எனது மனைவியுமான நேகா தற்போது UPSC தேர்வுக்கு படித்து வருகிறார்.

அவர் ஒரு வேலை அதில் தேர்ச்சிபெறவில்லை என்றால், இந்த புல்டோசரை வைத்து தொழில் செய்யலாம் என்றார். இது போன்ற பரிசு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். இது எங்கள் மாவட்டங்களுக்கு ஒரு புதிய முயற்சி" என்று கூறினார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுவாக திருமண வரதட்சணையாக கார், பைக் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் இந்த காலத்தில், பிழைத்துக்கொள்வார்கள் என்ற நோக்கத்தோடு புல்டோசர் வரதட்சணையாக வந்துள்ளது அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் புல்டோசர் வைத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது உ.பி-யில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சர் ஆகியுள்ளார். இதனால் அவருக்கு 'புல்டோசர் பாபா' என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் தப்பிய குடும்பம்: இரவில் நடந்த பயங்கரம்!