India

ஒரு முறையல்ல 68 முறை.. வந்தே பாரத் ரயில் குறித்து அதிர்ச்சி தகவல் சொன்ன ஒன்றிய அரசு!

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து காந்தி நகர் - மும்பை, சென்னை - மைசூர் இடையே என இதுவரை 5 வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வந்தே பாரத் ரயில்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா?, அதேபோல் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுமா? என எழுத்துப் பூர்வமாகக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்," 502 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகள் தயாரிக்கவும் அரசு அனுமதி வழங்கும்.

வந்தே பாரத் ரயில்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களுக்கான திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகிறது.ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி இப்போது வரை கடந்த 6 மாதத்தில் 68 முறை கால்நடைகள் மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் உயர்தர எஃகு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயிலின் முன்பகுதி வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. ஒன்றிய அரசிடம் வந்தே பாரத் 2.0 திட்டமும் உள்ளது" என தெரிவித்துள்ளார்

Also Read: “பயத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் உதயநிதி மீதான விமர்சனங்களே”: விஷமிகளுக்கு முரசொலி பதிலடி !