India

“இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும்..” - நீதிமன்றம் வரை சென்ற மாணவிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை !

நாட்டில் பின்தங்கிய வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்க வழிவகை செய்யும் ஒன்றே இட ஒதுக்கீடு. முதலில் பட்டியலினத்தவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த விதி, பிறகு மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஒதுக்கீடு என்பது பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. சிலர் இதற்கு எதிராக இருந்தாலும், பலரும் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டால் அடித்தட்டில் இருந்து உயரத்திற்கு வந்து பயனடைந்தவர்கள் ஏராளம். குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமின்றி பாலினத்திற்கும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், இட ஒதுக்கீடு நாட்டை கீழ் நோக்கி இழுத்து செல்வதாக சிலர் கருத்து தெரிவித்து எதிராக இருக்கின்றனர். அந்த வகையில், இமாச்சலை சேர்ந்த ஷிவானி என்ற சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், நாடு முழுவதும் இருக்கும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், சாதிய முறையை ஊக்கப்படுத்துகிறது. எனவே நாடு முழுவதும் இருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான அமரவு இன்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், இது என்ன மாதிரியான வழக்கு என்றும், விளம்பர நோக்கில் இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும் இந்த பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி DY சந்திரசூட்

இதையடுத்து மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இந்த மனுவை திரும்ப பெற அனுமதியளிக்குமாறு கேட்க, உடனே நீதிபதிகளும் அனுமதியளித்தனர். பின்னர் மனுதாரர் சார்பில் வழக்கு திரும்ப பெறப்பட்டது.

நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என இமாச்சலத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவிக்கு குட்டு வைத்து அனுப்பியுள்ள நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட் ஆள்மாறாட்டம்: ஓராண்டுக்கு பின் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது - அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்!