India

5 ஆண்டுகளில் 7 லட்சம் பேர் தற்கொலை.. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தொடரில் 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கான காரணங்கள் குறித்து ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதா?, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், "தற்கொலைக்கான காரணங்கள் வயது, பாலினம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவை பொறுத்து அமைகிறது.

இதுவரை நிகழ்ந்த தற்கொலைகளில் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகள், உளவியல் பிரச்சனைகள், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, போதைக்கு அடிமையாதல், தாங்க முடியாத நோய்கள் ஆகியவை என கண்டறியப்பட்டுள்ளது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அதாவது 2017-2021ம் ஆண்டு வரை 7,20,611 பேர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 2,50,164 பேர் 18 முதல் 29 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டில் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 2017-2021ம் என 5 ஆண்டில் 77,656 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியரால் கொந்தளித்த பெற்றோர் -பாஜக ஆளும் மாநிலத்தில் ஷாக் !