India

“தியேட்டரில் படம் பார்க்கும்போது குழந்தை அழுகிறதா..?” -கேரள அரசு அறிமுகப்படுத்திய Crying Room !

அன்று முதல் இன்று வரை சினிமா ரசிகர்கள் குறையாமல் அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகின்றன. என்னதான் தற்போதுள்ள காலகட்டத்தில், மொபைல் போன், ஓடிடி உள்ளிட்ட பல வந்தாலும் திரையரங்கிற்கு சென்று கைதட்டி, விசிலடித்து திரைப்படத்தை காண தனி ரசிகர் கூட்டமே உண்டு.

அதிலும் தங்களுக்கு பிடித்த நாயகன்கள் நடித்த படங்களை தியேட்டரில் கண்டுகளிப்பதே ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்கும். அது மட்டுமின்றி, சிலர் வெளியில் செல்ல வேண்டும் என்று கூறியே தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் கூட்டமும் இருக்கிறது. அதோடு நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி விசிலடித்து படம் பார்க்கும் கூட்டமும் தனியாக இருக்கிறது.

இப்படி தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொல்லையாக இருப்பது படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரவது குறுக்கே செல்வது; செல்போனில் லைட் அடித்துக்கொண்டே தங்கள் இருக்கையை தேடி கண்டு பிடித்து செல்வது; திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளை கூட்டி வரும்போது அந்த குழந்தை அழுவது என பல இடையூறுகள் இருக்கும்.

இதில் சமாளிக்க முடியாதவை என்றால், அது குழந்தைகள் அழுவது தான். மேலும் இவ்வாறு குழந்தைகள் அழுவதால், பெற்றோர்களும் நிம்மதியாக முழு நேர படத்தை முழுமையாக பார்க்க இயலாமல் போகிறது. திரை ரசிகர்களின் இந்த கஷ்டத்தை போக்க தான் கேரள அரசு 'Crying Room’ என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள 'கைரளி- ஸ்ரீ- நிலா தியேட்டர்' வளாகத்தில் அம்மாநில அரசு ‘Crying Room’ என்ற புதிய அறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அழும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள், அந்த Crying Room-ல் வைத்து படம் பார்க்கவும் இயலும். அதற்காக இருக்கைகள், தொட்டில்கள், ஜன்னல்கள், சவுண்ட் ப்ரூஃப் போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில கலாச்சாத் துறை அமைச்சர் வி.என்.வாசன், "படத்தை ரசிக்க குழந்தைகளுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் மிகவும் அரிது. திரையரங்கின் இருளும், ஒலியும், வெளிச்சமும் பழகாத குழந்தைகள் மனம் உடைந்து, பெற்றோர்கள் தியேட்டரை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. ஆனால் இப்போது படம் பார்த்து குழந்தை அழுதால் தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை

கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) மாநிலத்தில் உள்ள மற்ற தியேட்டர்களிலும் இதுபோன்ற பல ‘Crying Room’ வசதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: இது தாயின் முடிவு.. 33 வார கருவை கலைக்க அனுமதி கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்: காரணம் என்ன?