India

உ.பியை உலுக்கிய எலி பஞ்சாயத்து: எலி இறந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியீடு -ஆர்வலர் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலம், சதர் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு விலங்குகள் உரிமை ஆர்வலர் விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் என்ற இளைஞர் தனது கையில் எலியை வைத்து கொடுமை செய்துகொண்டிருந்தார்.

இதனை கண்ட அவர், உடனே இளைஞரிடம் சென்று இவ்வாறு துன்புறுத்தவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதனை சற்றும் செவி கொடுத்து கேட்காத இளைஞர், அவர் முன்பே அந்த எலியை மேலும் துன்புறுத்தியுள்ளார். அதோடு அந்த எலி மீது கல்லை கட்டி அருகிலிருந்த கால்வாயில் தூக்கியெறிந்துள்ளார்.

இதனை கண்ட ஆர்வலரோ, உடனே கால்வாய்க்குள் குதித்து அந்த எலியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அது இறந்துவிட்டது. இதையடுத்து அதிரமடைந்த அந்த ஆர்வலர், இறந்துபோன எலியுடன் அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞர் மீது புகார் அளித்தார்.

மேலும் எலியை கொன்றதற்காக விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த எலி உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துணைக் கண்காணிப்பாளர் கூறுகையில், "இந்த நிகழ்வு தொடர்பாக வந்த புகாரையடுத்து இளைஞரை உடனடியாக அழைத்து விசாரித்துள்ளோம். அதோடு இறந்த எலியின் உடலை முதலில் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அங்கு போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பரேலியில் உள்ள ஐ.வி.ஆர்.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த குற்றம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது" என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது அதன் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதன்படி எலி நீரில் மூழ்கியதால் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதன் கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்னை காரணமாகவே அது இறக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஐ.வி.ஆர்.ஐ-யின் இணை இயக்குநர் மருத்துவர் கே.பி.சிங் கூறுகையில், “எலியின் நுரையீரலின் நுண்ணோக்கி பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அதன் நுரையீரலில் வடிகால் நீர் எந்த மாசுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நுரையீரலின் தசைகள் கடுமையாக கிழிந்திருந்தன.

எந்த ஒரு விலங்கு அல்லது மனிதன் இறக்கும் போது அதிகமாக சுவாசித்தால், அவை வெடிக்கும். மேலும், எலிக்கு கல்லீரலில் ஏற்கனவே தொற்று இருந்தது. பரிசோதித்த பிறகு, மூச்சுத் திணறலால் எலி இறந்துவிட்டது என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர்” என்றார்.

இந்தியாவில் எலியை கொள்வதற்கு பல மருந்துகள் அதிகாரபூர்வமாக விற்பனையாகும் நிலையில், எலி காலில் கல்லை கட்டி நீருக்குள் போட்டு கொன்ற இளைஞர் மீது புகார் கொடுத்துள்ளது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 581 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு: “உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” -உபி போலிஸ் சொன்ன விளக்கம்