India

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : வாடகை வீட்டில் வெடி பொருள் கண்டுபிடிப்பு - வெளிவந்த பகீர் தகவல் !

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் சென்ற பயணியின் பையிலிருந்த பார்சல் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே புகைமண்டலமாக மாறியது இருப்பினும் ஆட்டோ ஓட்டுநரும் ஆட்டோவில் சென்ற பயணியும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில், நவம்பர் 19 அன்று, குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரீக், மைசூரிலிருந்து ஹூன்சூர், மடிக்கேரி, புத்தூர், பி.சி. ரோடு வழியாக நாகுரியில் இறங்கி ஆட்டோவில் பம்ப்வெல் நோக்கிச் சென்றபோது பிரஷர் குக்கர் வெடித்து சிதறியது.

இதுததொடர்பாக அவரது குடும்பத்தினர் மங்களூரு வந்து அவரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த குற்றத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இந்த வழக்கை விசாரிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை முறியடிப்பதில் மங்களூரு போலிஸார் மகத்தான பணியை செய்துள்ளனர்.

மங்களூரு மற்றும் மைசூரு ஆகிய இரு போலீஸ் கமிஷனர்களையும் நான் வாழ்த்துகிறேன். நவம்பர் 19 அன்று நாகுரியில் இருந்து பம்ப்வெல் நோக்கி பயணிகளுடன் ஆட்டோரிக்ஷா சென்று கொண்டிருந்தது. ஆட்டோ பேருந்து நிலையம் வந்தடைந்தபோது, ​​பயணியின் பையில் இருந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், ஆட்டோவில் பயணித்த பயணி மற்றும் ஓட்டுனர் தீக்காயம் அடைந்தனர். இந்த பயங்கரத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் (60) காயமடைந்தார் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பயணியின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டுள்ளோம்.

ஆட்டோ ஓட்டுநரின் புகாரின் பேரில் கங்கனாடி டவுன் காவல் நிலையத்தில் பிரிவு 120 (பி) மற்றும் 307 ஐபிசி மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஃபாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஆதார் அட்டையை மீட்டுள்ளோம். அதில் ஹுப்பள்ளி முகவரியுடன் பிரேம்ராஜ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகவரியை உறுதி செய்ததில், அந்த நபரின் ஆதார் அட்டை காணாமல் போனதை கண்டுபிடித்தோம். குற்றம் செய்ய ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து மொபைல் போனை மீட்டு விசாரணை நடத்தியதில், முகமது ஷரீக் என்பவர் மங்களூரு கிழக்கு மற்றும் வடக்கு காவல் நிலையங்களிலும், ஷிவமொக்கா கிராமப்புற காவல் நிலையத்திலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் பம்ப்வெல் ஃப்ளைஓவர் சுவரில் கிராஃபிட்டியை எழுதுவதில் ஈடுபட்டு நவம்பர் 27, 2020 அன்று மங்களூரு கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 28, 2020 அன்று, மங்களூரு வடக்கு காவல் நிலைய எல்லையில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் எழுதியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு வழக்குகளிலும், முகமது ஷரீக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 9, 2022 அன்று, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967ன் கீழ் ஷிவமொக்கா ரூரல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முகமது ஷரீக் வழக்கு பதியப்பட்டதும் ஷரீக் சிவமொக்காவிலிருந்து தப்பி மைசூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். நவம்பர் 19-ம் தேதி மைசூரிலிருந்து பயணம் செய்து மங்களூருவில் ஒரு குற்றம் செய்தார்.

தகவலின் அடிப்படையில், மைசூருவில் உள்ள வாடகை வீட்டில் சல்பர் பவுடர், நட்ஸ், போல்ட், சர்க்யூட்கள், மல்டி ஃபங்ஷன் டிலே டைமர்கள், கிரைண்டர், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர்கள், ஆதார் கார்டுகள், அலுமினிய ஃபாயில், சிம் கார்டுகள், மொபைல் டிஸ்ப்ளே போன்ற பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. மற்றும் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு விபத்து தற்செயலானது அல்ல.. தீவிரவாத தாக்குதல்” : கர்நாடக DGP பகீர் தகவல்!