India
300 ஏக்கர் தரிசு நிலத்தை காடாக மாற்றி சாதனை.. தனியொரு இளைஞரின் முயற்சியால் உயிர்பெற்ற காடுகள் !
சமீப காலமாகப் பருவநிலை மாறுபாடு காரணமாக உலகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் அதீத மழைபொழிவால் வெள்ளமும் பல இடங்களில் கடுமையான வறட்சியும் ஏற்படுகிறது. காடுகள், மரங்கள் போன்றரை அழிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
காடுகளை அழிப்பதில் மனிதனே முக்கிய பங்கு வகிக்கிறான். மனித தேவைக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதோடு காடுகளும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம் சில தனி மனிதர்களால் காடுகள் காப்பாற்றப்பட்டு அவை மெருகேற்றவும் படுகின்றன.
அந்த சில வகை மனிதர்களில் ஒருவர்தான் மொய்ராங்தெம் லோய்யா(வயது 47). இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மேற்கு மாவட்டமான இம்ஃபாலைச் சேர்ந்த இவர் தன் முயற்சியால் தரிசு நிலத்தை 300 ஏக்கர் காடாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் கல்வியை முடித்த அவர் பின்னர் தனது மாநிலத்துக்கு செல்லும்போது அங்கு கோப்ரு மலைத்தொடரில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு காடு அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அழிக்கப்பட்ட அந்த காடுகளை மீண்டும் கொண்டுவர அவர் சபதமெடுத்துள்ளார்.
இதற்காக அந்த மலைத்தொடரிலேயே ஒரு குடிசையை அமைத்து தங்கியவர் ஆறு வருடங்களாக அழிக்கப்பட்ட அந்த காட்டுப்பகுதியில் மூங்கில், கருவேலம், பலா மரங்கள் மற்றும் தேக்கு மரங்களை நட்டதோடு அவற்றை பராமரித்தும் வந்துள்ளார்.
இதுதவிர லோய்யா வனவிலங்கு மற்றும் வாழ்விடம் பாதுகாப்பு சங்கம் (WAHPS) என்னும் அமைப்பை நிறுவிய அவர், சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதை அமைப்பின் கொள்கையாக வைத்துள்ளார்.
இவர் உருவாக்கிய காட்டில், ஏராளமான மான்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் வாழ்வதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் இல்லாவிட்டால் இந்த காடுகள் மேலும் அழிக்கப்பட்டு அங்கு குடியிருப்புகள் உருவாகியிருக்கும் என்றும், அதனை இவர் தடுத்து வனத்தை காப்பாற்றியுள்ளார் என்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!