India

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்.. வீட்டை விட்டு துரத்திய அவலம்-ராஜஸ்தானில் கொடூரம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மகளை, தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால் வீட்டை விட்டு துரத்திய நிகழ்வு ராஜஸ்தானில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியில் 22 வயதுடைய மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். நீண்ட நேரம் அங்கே இருந்ததால் அங்குள்ள பொதுமக்கள், அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவரோ எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி வாசிகள், இளம்பெண்ணை பற்றி ஹிரன் மங்க்ரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து விசாரிக்கையில், இவருக்கு காது மாறும் வாய் பேசமுடியாது என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணுக்கோ காப்பகத்தில் இருக்க விருப்பமில்லாமல் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது சுவர் மீது அவர் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்து காலில் அடிபட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை மீட்ட காப்பக ஊழியர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அங்கே அந்த பெண்ணை பரிசோதித்ததில், அவரது காலில் எலும்பு முறிந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அந்த பெண் தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள், பெண்ணிடம் இது குறித்து கேட்டனர். அப்போதும் அந்த பெண்ணால் பேச இயலவில்லை என்பதால், சைகை மொழி பேசும் நிபுணரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண்ணை பல்வேறு சமயங்களில் 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அழுதுகொண்டே தெரிவித்தார். இதனை கேட்டதும் அதிர்ச்சியான அதிகாரிகள் பெண்ணின் குடும்பத்தினரை பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மாற்றுத்திறனாளி மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதும் ஏற்கனவே தங்களுக்கு தெரியும் என்றும், இது வெளியே தெரிந்தால் எங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால் அவரை வீட்டை விட்டு துரத்தியதாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மகளை, தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால் வீட்டை விட்டு துரத்திய நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “15 வயது பெண்ணின் திருமணம், குழந்தை திருமணம் ஆகாது..” : அரியானா நீதிமன்றத்தின் தீர்ப்பால் பரபரப்பு!