India

2 மணி நேரமாக முடக்கப்பட்ட Whatsapp.. மெட்டா நிறுவனத்திடம் விளக்க அறிக்கை கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ் !

தற்போதுள்ள இந்த இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாக செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கிறது.

இது போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது. இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வாட்சப் என்பது பிரதானமாக விளங்குகிறது.

பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வாட்சப் செயலி, இந்தியாவில் முக்கிய தகவல் பரிமாற்று செயலியாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய மக்களுக்கு தகவல் பரிமாற்றத்தில் முக்கிய புள்ளியாக விளங்கும் இந்த வாட்சப், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 2 மணி நேரமாக திடீரென்று செய்லபடவில்லை.

அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு (25.10.2022) முன்பு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் தங்களது தகவல்களை பரிமாற்றம் செய்வதில் பெரும் சிக்கலானது. அதாவது சூரிய கிரகணத்தன்று சுமார் 2 மணி நேரம் வாட்சப் இயங்கவில்லை. வாட்சப் இயங்காததற்கு வாட்சப் நிறுவனத்திடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் வாட்சப் செயலி ஏன் முடக்கப்பட்டது என வாட்சப் நிறுவனத்திடம் ஒன்றிய அரசு கேள்வியெழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது வாட்ஸப்பின் மெட்டா நிறுவனத்திடம் வாட்சப் சேவை முடங்கியதற்கான விளக்கத்தை விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை.. அமைதிச் சூழலை உருவாக்கிய காவல்துறை” : முரசொலி !